ஜென் சிறு கதைகள் 07 – செல்வம்
பெரும் செல்வந்தன் ஒருவன் ஜென் துறவியைச் சந்திக்கச் சென்றான். ”எனது சந்தோஷத்தையும், செல்வத்தையும் பெருக்கும் விதமாக ஊக்குவிக்கும் வார்த்தைகள் ஏதாவது எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டான். ”அது என்னுடைய குடும்பத்தையும், சந்ததியினரையும் வளமாக்கட்டும்” என்றான்.ஒரு பெரிய தாளில் “தந்தை சாவான், மகன் சாவான், பேரன் சாவான்” என்று எழுதிக் கொடுத்தார்.
இதனைப் பார்த்த செல்வந்தனுக்கு பெரும் கோபம் வந்தது. ”நான் உங்களிடம் எனது சந்தோஷத்தையும், செல்வத்தையும் பெருக்கும் விதமாக ஊக்குவிக்கும் வார்த்தைகள் ஏதாவது எழுதிக் கொடுக்கச் சொன்னால், இப்படி மன அழுத்தத்தை உண்டாக்கும் வார்த்தைகளை ஏன் எழுதிக் கொடுக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
”உனக்கு முன்னர் உன் மகன் இறந்தால், உன் குடும்பம் மீளாத்துயர் அடையும். அதே போல் உன் மகனுக்கு முன்னால் உன் பேரன் இறந்து விட்டால் பெரும் துயரம் உங்களைச் சூழும். நான் சொன்ன வரிசைப்படி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மறைவார்களேயானால் அதுவே இயற்கை. அதுவே சிறந்த செல்வம் மற்றும் மகிழ்ச்சி” என்றார் துறவி.
இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி : வாழ்க்கையே பெரும் செல்வம் (Life is Wealth)
ஜென் சிறு கதைகள் பட்டியல்
ஜென் சிறு கதைகள் 02– இளம்பெண்ணும் துறவியும்
இரு துறவிகள் ஒரு ஆற்றங்கரையைக் கடப்பதற்காக சென்று கொண்டிருந்தார்கள். ஒரு இளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்த பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி செலுத்திவிட்டு சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “என்றார்.
இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள் தான் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்கள்” என்றார்.
இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி : பிறரையும் தன்னைப்போல் நேசி
ஜென் சிறு கதைகள் 03–கடின உழைப்பு
”ஐயா, நான் கராத்தே கற்க விரும்புகிறேன். நான் அதில் முதல்வனாகத் திகழ எத்தனை நாட்கள் ஆகும்?” என்று கேட்டான்.
குரு சொன்னார்: “10 வருடங்களாகும்” என்று.
பொறுமையிழந்த மாணவனோ ” நான் இன்னும் வேகமாகக் கற்க விரும்புகிறேன். அதற்காக என் கடின உழைப்பைக் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். தினமும் பத்து மணி நேரமோ அதற்கு மேலும் கூடவோ பயிற்சி எடுப்பேன். அப்படி செய்தால் எத்தனை மணி நேரமாகும்?” என்று கேட்டான்.
சற்று யோசித்த குருவோ சொன்னார்: “20 வருடங்களாகும்”

இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி : எதையும் அவசரப்பட்டு கற்க முடியாது. பதறிய காரியம் சிதறும். (Haste makes waste)
ஜென் சிறு கதைகள் 04- பூனையும் மடமும்
Posted on 02 December 2010.
ஒரு மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும் இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக் கலைத்துக் கொண்டிருந்தது.
அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்” என்று உத்தரவிட்டார்.
சில ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக் கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள் கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி வைக்கப் பட்டது. பல ஆண்டுகள் கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி :மூடநம்பிக்கை என்பது நம்பிக்கையல்ல…. பழக்கம்.
தமிழ் வளத்துடன் தொடர்பிலிருக்க!
ஜென் சிறு கதைகள் 05–குரு – சிஷ்யன் – கடவுள்
Posted on 03 December 2010.
துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து
எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது?” என்றார்.

”காற்று” என்றான் இளைஞன்.
”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.
இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி :முதலில் தகுதியாக்கிக் கொள். பின்னர் ஆசைப்படு (First Deserve & then Desire)
Categorized | கதைகள், படைப்புகள்
ஜென் சிறு கதைகள் 08 – துறவியும் தேளும்
Posted on 05 December 2010.
இரு துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு தேள் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததைக்
கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை எடுத்து ஆற்றங்கரையில் விட்டார்.
அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.
சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும் அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதனைக் கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”
இந்த ஜென் சிறு கதை உணர்த்தும் நீதி : தீமை செய்பவர்க்கும் நன்மையே செய்
ஜென் சிறு கதைகள் பட்டியல்
ஜென் சிறு கதைகள் 10 – இதுவும் கடந்து போகும்
Posted on 11 December 2010.
துறவியிடம் சீடன் சொன்னான்: ” என்னுடைய தியானம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. என் கவனம் முழுக்க சிதறி விடுகிறது. கால்கள் வலிக்கிறது.
நான் சற்று தியானம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறேன். மிகவும் கொடுமையாக இருக்கிறது”துறவி சொன்னார்: ”இது கடந்து போகும்”

சில நாட்கள் கழித்து துறவியிடம் சீடன் சொன்னான்: ”இப்போதெல்லாம் என் தியான அனுபவம் அற்புதமாக இருக்கிறது. தற்போதெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். மிகவும் அமைதியான இருக்கிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது”
துறவி சொன்னார்: ”இது கடந்து போகும்”
இந்த ஜென் சிறுகதை உணர்த்தும் நீதி:மாற்றம் ஒன்றே மாறாதது. (The only thing doesn’t change is “Change “)
ஜென் சிறு கதைகள் 11 – வெற்றியாளன்
Posted on 16 December 2010.
இரண்டு ஜென் குருக்களின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.”எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?”, என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.
ஜிங்ஜு `எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை
பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்’, என்றான்.
அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குரு
உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன். ” அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார் என்றான் ஜிங்ஜு.
இந்த ஜென் சிறுகதை உணர்த்தும் நீதி : சாதாரண மனிதனாகவே இரு. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும். (Winners don’t do different things, they do things differently)
ஜென் சிறு கதைகள் 12 – வாழ்க்கை ஒரு வட்டம்!
Posted on 16 December 2010.
ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும், கவலையும் அடைந்திருந்தான்.
ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான். வெளியில் இருந்து பார்த்தான், செல்வந்தனின் செல்வச் செழிப்பும், அவன் வீட்டிற்கு வரும் பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது பேராசையும் பொறாமையும் அடைந்தான். கடவுளிடம் தன்னை செல்வந்தனாக மாற்றிவிடுமாறு வேண்டினான். கடவுளும் இசைந்து அவனை செல்வந்தனாக மாற்றினார்.

செல்வ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த அவன் வீட்டிற்கு, வருமான வரித் துறை அதிகாரி தன் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினான். அந்த அதிகாரியின் பேச்சைக் கேட்கும் ஊழியர்கள், அவனுக்கு இருக்கும் மரியாதை ஆகியவை செல்வந்தனாக இருந்த தொழிலாளியைக் கவர்ந்து விட்டன. உடனடியாக வருமான வரித் துறை அதிகாரியாக ஆசைப்பட்டான். கடவுளும் அவனை வருமான வரித் துறை அதிகாரியாக மாற்றினார்.

வருமான வரித் துறை அதிகாரியான அந்த கல் உடைக்கும் தொழிலாளி எல்லோர் வீட்டிற்கும் சோதனைக்குச் சென்றான். அனைவரின் வெறுப்புக்கும் ஆளானான். கோடை காலம் வந்தது. வெந்து தணிந்தது அவன் உடம்பு. சூரியனைப் பார்த்தான். யாருக்கும் பயப்படாத, எல்லோரையும் சுட்டெரிக்கும் சூரியன் போல் மாறிடத் துடித்தான்.

கடவுளும் அவனை சூரியனாக மாற்றினான். தன் கதிர்களால் பிரகாசமான வெளிச்சத்தையும், சூட்டையும் வாரித் தெளித்த சூரியனை விவசாயிகள் திட்டினர். பெரும் மேகம் ஒன்று வந்தது. சூரியனின் வெளிச்சத்தை அது மறைத்தது. இருட்டாக்கியது. மழை மேகமாய் மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

மழை மேகமாய் மாறி, மழையாய்ப் பொழிந்து, வெள்ளமாய் பெருக்கெடுத்து விவசாயிகளின் வயிற்றெரிச்சலைப் பெற்றான். மேகமாக மாறிய அவனை ஏதோ சக்தி மிகுந்த ஒன்று இழுத்துச் செல்வதைப் பார்த்தான். காற்று என அறிந்த்தும், காற்றாகி விட வேண்டினான் கடவுளை.

காற்றாக மாறி, சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து வந்தான். கூரை வீடுகளையும், மரங்களையும் சாய்த்தான். ஆனால் தன்னால் பெரும் பாறை ஒன்றினுள் புக முடியாததை எண்ணி தன்னை பாறையாக மாற்றி விடுமாறு கடவுளை வேண்டினான்.

பாறையாக மாறிய அவன் தன்னைப் போல் சக்தி மிகுந்த்து இந்த உலகில் எதுவும் இல்லை என்று பெருமிதம் அடைந்தான். உடனே தன்னை சுத்தி மற்றும் உளியால் பிளக்க வந்த தொழிலாளியைப் பார்த்த்தும், கடவுளிடம் தன்னைப் பழையபடி கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிடும் படி மன்னிப்புடன் வேண்டினான். கடவுளும் வாழ்க்கையை உணர்ந்த அவனை கல் உடைக்கும் தொழிலாளியாகவே மாற்றிவிட்டார்.

இந்த ஜென் சிறுகதை உணர்த்தும் நீதி: வாழ்க்கை முடிவும் தொடக்கமும் ஒன்றாகவே அமைந்த ஒரு வட்டம். ( At the end of all our searching we will arrive at the place we began and know it for the first time)
No comments:
Post a Comment